நியூசிலாந்தின் பெண் அதிபரான ஜெசிந்தா திடீரென்று பதவி விலகுவதாக அறிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் கடந்த 2017 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி அன்று பிரதமராக பதவியேற்ற ஜெசிந்தா இளம் வயதில் பிரதமரான பெண் என்ற பெருமையை பெற்றிருந்தார். அதன் பிறகு, 2018 ஆம் வருடத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்மூலம், பதவியில் இருக்கும்போது குழந்தை பெற்றுக் கொண்ட இரண்டாம் உலக தலைவர் என்ற பெருமையும் பெற்றார்.

கொரோனா போன்ற இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை சரியான பாதையில் வழி நடத்தி சென்றதாக பாராட்டுகளை பெற்றார். மேலும், கிறைஸ்ட் சர்ச் நகரின் மசூதியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்த சமயத்திலும், சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தார். எனினும் சமீப நாட்களில் கருத்து கணிப்புகளில் அவரின் செல்வாக்கு மோசமடைந்தது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று பத்திரிகையாளர்களுக்கு நேர்காணல் கொடுத்த போது, கண்களில் வழியும் கண்ணீரை மறைத்துக்கொண்டு பதவி விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது, என் ஆறாவது வருட பதவி காலத்தில் அடி எடுத்து வைக்கிறேன்.

கடந்த வருடங்களில் என் முழு பணியையும் சிறப்பாக தந்திருக்கிறேன். பிரதமர் பணியில் நான் அமர்ந்தது பாக்கியம். ஆனால் இது சவால்கள் நிறைந்த பணி. தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியை விட்டு வரும் பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி அன்று விலகவுள்ளேன். நாட்டில் வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி என்று பொதுத்தேர்தல் நடக்கும்.

கோடை காலத்தில், வருங்காலம் தொடர்பாக கவனிப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்கிறேன். அதுவரை நான் பதவியில் நீடிக்கலாம் என்று நம்பியிருந்தேன். ஆனால் அவ்வாறு என்னால் செய்ய முடியவில்லை. அவ்வாறு தொடர்ந்து நீடித்தால் அது நாட்டிற்கு அவமதிப்பாக இருக்கும். எனினும் எம்.பி பதவியில் நீடிப்பேன்.

அமைதியான சூழ்நிலையில் ஒருபுறமும், நெருக்கடியான நிலையில் மற்றொருபுறமும் நாட்டை வழிநடத்தும் நிலை ஏற்பட்டது. பொது தேர்தலில், தொழிலாளர் கட்சி வெல்லாது என்பதற்காக நான் ராஜினாமா செய்யவில்லை. வெற்றி வெற்றி விடும் என்ற நம்பிக்கை உள்ளது. எனினும், அந்த சவால்களை எதிர்கொள்ள புதிதான தோள்கள் தேவை என கருதுவதாக கூறியிருக்கிறார்.