
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்வதற்காக 420 கோடி மதிப்பீட்டில் 1000 பேருந்துகள் புதிதாக கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோன்று 1000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், அரசு பேருந்து ஒழுகுவதால் பயணிகள் பேருந்துக்குள் குடை பிடித்துக் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை மற்றும் நாகர்கோவில் இடையே செல்லும் அரசு பேருந்தில் மழை காரணமாக தண்ணீர் பேருந்துக்குள் வந்ததால் பயணிகள் குடைபிடித்தபடியே பயணம் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.