
தமிழர்களின் பாரம்பரிய கொண்டாட்டங்களில் பொங்கல் கொண்டாட்டம் மிகவும் முக்கியமான ஒன்று. இந்நிலையில் உழவுத் தொழில் கால்நடை மற்றும் இயற்கைக்கு மரியாதையும் நன்றியும் செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் அந்தந்த பாரம்பரிய முறைப்படி போகி முதல் காணும் பொங்கல் வரை 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தென்னிந்தியாவில் தைப்பொங்கல் கொண்டாட்டம் ஒரே மாதிரியாக இருக்கும். தமிழ்நாட்டில் நான்கு நாட்கள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் வீட்டை சுத்தம் செய்து பழைய பொருட்களை அப்புறப்படுத்துவது வழக்கம். பழையன கழிதல் புதியன புகுதல் என்று புதிய வாழ்க்கை மாற்றங்களை வரவேற்கும் விதமாக போகி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து பொங்கல் திருநாள் அன்று வீட்டை அலங்கரித்து வண்ண வண்ண கோலங்களை போடுவார்கள். அன்றைய தினம் அறுவடை செய்த அரிசி, புதிய பானை, வெல்லம் ஆகியவற்றை வைத்து சூரிய பகவானை வழிபட்டு பொங்கல் வைப்பார்கள். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. மகரம் என்றால் தை மாதத்தை குறிக்கும்.
தை மாதம் மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும். தை மாதத்தில் முதல் நாள் தனுசு ராசியில் இருந்து சூரியன் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதனை வைத்து மகர சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. குஜராத்தில் பட்டம் விடும் திருவிழா மகர சங்கராந்தியின் பகுதியாக உள்ளது. அங்கு குழந்தைகள் முதல் பட்டம் விடுவதில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள் வரை திருவிழாவில் கலந்துகொண்டு பட்டம் விடுவார்கள்.
பீகார் மற்றும் ஜார்கண்ட் போன்ற பகுதிகளில் பொங்கல் பண்டிகை சக்ராத் என அழைக்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பொங்கல் லோஹ்ரி என அழைக்கப்படும் . உத்திரபிரதேசம் மாநிலத்தில் பொங்கல் பண்டிகை கச்சேரி என அழைக்கப்படுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் சங்கமம் ஆகும் இடத்தில் மக்கள் கூட்டமாக சென்று நீராடுவார்கள். நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.