மாட்டுப் பொங்கல் இன்றளவும் கிராமங்களில் மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மாட்டுப்பொங்கல் தினம் அன்று கோ பூஜைகளில் கலந்து கொள்வதும் மகாலட்சுமி அருளை பெறுவதற்கு நல்ல வாய்ப்பாகும். பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவு தொழிலுக்கு விவசாயிகளுக்கு பெரும் துணையாக இருப்பது மாடுகள்.

எனவே மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாடுகளை குளிக்க வைத்து குங்கும பொட்டு வைத்து, சலங்கை கட்டி அதன் கொம்புகளில் வர்ணம் பூசி அலங்கரிப்பார்கள். இதனையடுத்து மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து கோலம் இட்டு சாம்பிராணி காட்டி பொங்கல் வைத்து வழிபடுவார்கள். பின்னர் அந்த பொங்கலை மாட்டிற்கு ஊட்டி மாட்டுப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

அந்த நாளில் மாடு இல்லாதவர்கள் முன்னோர்களை வழிபட வேண்டும். சிலர் மாட்டுப்பொங்கல் அன்று அசைவம் சமைத்து முன்னோர்களுக்கு படையல் வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைப்பார்கள். சமைத்த உணவுகளை முன்னோர்கள் படத்திற்கு முன்பாக வைத்து வழிபடுவார்கள்.

மேலும் வேட்டி, துண்டு, புடவை ஆகியவற்றையும் வைத்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசியும், கடவுளின் ஆசியும் கிடைக்கும். இதனையடுத்து படையலில் வைத்த ஆடைகளை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் உடுத்தி கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் யாருக்காவது தானமாக கொடுக்கலாம்.