
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி. இவர் கடந்த ஒரு வாரமாக உடல் நலம் சரியில்லாததால் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். அதன் பின் நேற்று மீண்டும் பணிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் சென்றுள்ளார்.
அப்போது சுந்தரமூர்த்தி ஆவினன்குடி பேருந்து நிலையத்தில் அருகே பேருந்து வந்த போது இரண்டு பைகளுடன் படிக்கட்டின் அருகே சென்றுள்ளார். அப்போது திடீரென நிலை தடுமாறிய சுந்தரமூர்த்தி ஓடும் பேருந்தில் இருந்து வேகமாக வெளியே விழுந்துள்ளார். இதனால் முகத்தில் பயங்கரமாக அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த ஆவினங்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த உதவி ஆய்வாளரின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.