உத்தரபிரதேசத்தின் பிலிபீத் மாவட்டத்தில் உள்ள டாக்கா கிராமத்தில் சோகமான சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை நான்கு பேர் கொண்ட குழுவினர் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

 

இந்த சம்பவம் ஜூலை 5-ஆம் தேதி இரவு பூரண்பூர் பகுதியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் இரவு ரோந்துப்பணியில் இருந்த இரண்டு போலீசாரில் ஒருவர், சந்தேகத்திற்கிடமான நபரை நிறுத்தி விசாரித்த போது, அந்த நபர் திடீரென அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், அதே பகுதியில் இருந்த இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் சேர்ந்துகொண்டு போலீசாரில் ஒருவரை தரையில் தள்ளிவிட்டு அடித்தனர். இந்த பயங்கர சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

இந்த வீடியோவைக் கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து, சட்டம் மற்றும் ஒழுங்கு மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது எனக் கருத்து தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இத்தகைய வன்முறைகள் காவல்துறையின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் விதமாக உள்ளன. பாதுகாப்புப் பணியில் இருப்பவர்களுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டால், பொதுமக்கள் எப்படி பாதுகாப்புடன் வாழ முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.