திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முதுமொத்தன்மொழி முத்தாரம்மன் கோவிலில் மகேஷ் என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சண்முகவேல் என்பவர் நேர்த்திக்கடனாக கோவிலுக்கு 3 தங்க பொட்டு தாலியை வழங்கினார். அதனை சுவாமி கழுத்தில் அணிவித்தனர். இந்நிலையில் கோவில் நிர்வாகிகள் ஏற்கனவே சுவாமி கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகளை சோதனை செய்தபோது அவை கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து கோவிலின் தர்மகர்த்தா காமராஜ் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பூசாரி மகேஷ் தங்க நகைகளை திருடி விட்டு அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்தது தெரியவந்தது. இதனால் போலீசார் மகேஷை கைது செய்து, 8 1/4 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.