திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்திலிருந்து நேற்று மாலை 5 மணிக்கு சரக்கு வேன் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை சார்லஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் தாமஸ், அருண்குமார், கவியரசு ஆகியோர் இருந்தனர். இதேபோல் நத்தம் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்க்கும் முருகேசன் என்பவர் தனது மனைவி மகாதேவியுடன் திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் திண்டுக்கல் அருகே விலக்கு ரோடு பகுதியில் சென்ற போது சரக்கு வேனும், காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரும், சரக்கு வேனும் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வாகனங்களில் பயணம் செய்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். இதற்கிடையே சரக்கு வேனில் இருந்த பெட்டியில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தது. அந்த பெட்டி உடைந்து வேனுக்குள் பணம் சிதறி கிடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரக்கு வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் சாணார்பட்டியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் எந்திரத்தில் பணத்தை வைப்பதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. அதன்பின் போலீசார் வேறு வாகனத்தை வரவழைத்து அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.