
சென்னை மாவட்டத்தில் உள்ள புது பெருங்களத்தூர் கலைஞர் நெடுஞ்சாலையில் நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகராஜனுக்கும், சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சரண்யா என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சரண்யா திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக நாகராஜனிடம் தெரிவித்தார்.
இதனை நம்பி நாகராஜன் வீட்டு வாடகை, சொந்த செலவு, மருத்துவ செலவு என சரண்யா கேட்கும்போதெல்லாம் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பியுள்ளார். இதுவரை சரண்யா அவரிடம் இருந்து 14 லட்சம் ரூபாய் வரை வாங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் நாகராஜன் தனக்கு பண பிரச்சனை ஏற்பட்டதாக கூறி கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு சரண்யா பணத்தை கொடுக்காமல் நாகராஜனுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இதுகுறித்து நாகராஜன் பீர்க்கன்காரனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சரண்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அவர் நாகராஜனை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். எனவே சரண்யாவை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.