திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் கன்னியாகுமரி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் பிறவி இருதய குறைபாடுகள் உள்ள குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி இதயத்தில் ஓட்டை இருந்த 9 குழந்தைகள், தமனி பிரச்சனை உள்ள 2 குழந்தைகள் என 11 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் பல்நோக்கு மருத்துவமனையில் இருதய சிகிச்சைக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மையங்களில் கடந்த 13-ஆம் தேதி நவீன முறையில் அறுவை சிகிச்சை இல்லாமல் 11 குழந்தைகளுக்கும் 3 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

முதல் முறையாக நவீன முறையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை இருதயவியல் டாக்டர் முத்துக்குமரன், 3 பேராசிரியர்கள், 6 உதவி பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர்களால் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மயக்கவியல் துறை டாக்டர் அமுதா ராணி, செல்வராஜ், ஜெயக்குமார், சசிகலா ஆகியோர் உதவியாக இருந்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட குழந்தைகள் ஒரு வாரம் டாக்டர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.

குறிப்பிட்ட காலத்திற்கு குழந்தைகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். இதே போன்று மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இதுவரை 8000 நோயாளிகளுக்கு இருதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என இருதயவியல் துணைப்பேராசிரியர் டாக்டர் ரவிச்சந்திரன் எட்வின் கூறியுள்ளார்.