கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொழிக்கோடு பறம்பு வளவிளை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் உள்ளார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ரமேஷ் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கல்லறை தோட்டத்தில் குழி அமைத்து 20 லிட்டர் அளவிற்கு சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர்.

இதற்கிடையே போலீசார் வருவதை பார்த்ததும் ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் சாராய ஊரல் பற்றி போலீசாருக்கு தனது மனைவிதான் தகவல் தெரிவித்திருக்கலாம் என சந்தேகப்பட்டு ரமேஷ் இந்துமதியை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் கோபத்தில் தனது மனைவியின் ஸ்கூட்டரை தீ வைத்து எரித்துவிட்டார். இதுகுறித்து இந்துமதி கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரமேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.