மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் முகமதுஷாபுரம் நான்காவது தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து பால்பாண்டி என்ற மகனும், புவனேஸ்வரி என்ற மருமகளும் இருக்கின்றனர். இதில் பால்பாண்டி மதுரையில் கண் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் முத்து பால்பாண்டிக்கு பிறந்தநாள். இதனால் முத்து பால்பாண்டி தனது மனைவி, தாய், மற்றும் குடும்பத்தினருடன் திருமங்கலத்தில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்று பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்தார். அதன்படி அனைவரும் பிறந்தநாள் விழாவை கொண்டாட சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து 20 பவுன் தங்க நகையை திருடி சென்றனர். இதனையடுத்து இரவு வீட்டிற்கு வந்த முத்து பால்பாண்டியின் குடும்பத்தினர் வீடு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.