கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் கலைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் முதலீடு செய்து லாபம் பெறுவது எப்படி என இணையதளத்தில் தேடியுள்ளார். இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் கலைச்செல்வியை தொடர்பு கொண்ட ஒருவர் நீங்கள் முதலீடு செய்தால் அந்த தொகைக்கு ஏற்ப கமிஷன் அடிப்படையில் அதிக லாபம் பெற்று தருவோம் என கூறியுள்ளார். இதனை நம்பி கலைச்செல்வி அந்த நபர் கூறிய 3 வங்கி கணக்குகளில் 19 லட்சத்து 2 ஆயிரத்து 993 ரூபாயை செலுத்தியுள்ளார்.

அதன் பிறகு அந்த நபர் கமிஷன் தொகையை கொடுக்கவில்லை. மேலும் போலியான இணையதள முகவரியை அனுப்பி கலைச்செல்வியிடமிருந்து நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கலைச்செல்வி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.