சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை காணிச்சா ஊருணி பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11-ஆம் தேதி புவனேஸ்வரத்தில் இருந்து சென்னை வருவதற்கு ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தார். அதற்கு கட்டணமாக சேகர் 2022 ரூபாய் செலுத்தியுள்ளார். இதனையடுத்து சேகர் டிக்கெட்டை ரத்து செய்ய முடிவு செய்தார். அப்போது டிக்கெட்டை ரத்து செய்தால் 1980 ரூபாய் மட்டுமே திரும்ப கிடைக்கும் என அவரது செல்போன் எண்ணிற்கு தகவல் வந்தது.

இதனை தொடர்ந்து சேகர் இணையதளத்தில் அது பற்றி தேடி ஒரு செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய நபர் டிக்கெட்டை ரத்து செய்த பணத்தை பெறுவதற்கு செல்போனுக்கு ஒரு ஓடிபி வரும், அதனை கூறுமாறு தெரிவித்தார். இதனை நம்பி அந்த நபர் கூறியவாறு சேகர் செய்தவுடன் அவரது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 5 ஆயிரத்து 877 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து சேகர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜுடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.