தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை இந்திரா நகரில் பாரின் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த மகள் சுபாஸ்ரீ பிகாம் படித்து முடித்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சுபாஸ்ரீ நாஞ்சிக்கோட்டை சிப்காட் வளாகத்தில் இருக்கும் ஒரு ஒர்க் ஷாப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் ஒர்க் ஷாப் கதவை உடைத்து உள்ளே சென்று சுபாஸ்ரீயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாரின் ராஜா தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் எனது மூத்த மகளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி எனது மகள் அவருடன் சென்று விட்டார். இதனால் நானும் எனது குடும்பத்தினரும் சுபா ஸ்ரீயிடம் பேசுவதில்லை. எனது மகளை இரண்டாம் தரமாக ஏற்றுக்கொள்ள முடியாமல் அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்துள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.