கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் வேட்பாளர்களை அறிவித்திருந்தார்கள். பாஜக வேண்டுகோளின் பெயரில் புலிகேசி நகர் தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தங்கள் வேட்பாளர்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பில் குமார் என்பவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மீது தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதாவது அதிமுகவின் பெயரில் குமார் ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து பி.பார்ம் பற்றி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக செயலாளர் எஸ்.டி. குமார் போலியான ஆவணங்கள் மூலம் இரட்டை இலை சின்னத்தை குமார் கோரியதாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தார். தற்போது எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் பொதுச் செயலாளராக அங்கீகரித்ததோடு அவருக்கு இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்துள்ளதால் ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என இபிஎஸ் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுகவின் பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால் அதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் குமார் மீது வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில் காட்டன் பேட்டை காவல்துறையினர் தேர்தல் ஆணையத்துக்கு தவறான அறிக்கைகளை கொடுத்ததாக கூறி குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஓபிஎஸ் தரப்புக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருவது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.