தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தின் விஏஓ லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் முறப்பநாடு பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அகரம் என்ற சிறிய கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து விவசாயம் செய்து வரும் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவரின் பாதுகாப்புடன் ஆடு மாடுகளை மேய்த்து வருகிறார்.

அதாவது கடந்த 2019-ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு 1-வது வார்டு பஞ்சாயத்து உறுப்பினராக பாலகிருஷ்ணன் இருக்கிறார். இவருடைய கிராமத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரைப்பகுதியில் மணல் கொள்ளை நடந்துள்ளது. அப்பகுதியை ஒட்டியுள்ள சுடுகாட்டிலும் மணல் கொள்ளை நடந்ததால் எலும்புக்கூடுகள் வெளியே தெரிந்துள்ளது. இதனால் பாலகிருஷ்ணன் கிராம மக்களிடமிருந்து புகாரை பெற்றுக் கொண்டு மணல் கொள்ளை குறித்து முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அங்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் மதுரை கிளை உயர்நீதிமன்ற வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனால் மணல் கொள்ளைக்காரர்களிடமிருந்து பாலகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. கொலை மிரட்டல் வந்ததை நீதிபதிகளும் உறுதி செய்ததால் அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவர் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் கடந்த 2 வருடங்களாக விவசாயி பாலகிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவர் பாதுகாப்பு கொடுத்து வருகிறார்.