டெல்லியில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் 2 தினங்கள் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் கட்சியின் பிற மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இதை முன்னிட்டு பிரதமர் மோடியை கவுரவிக்கும் அடிப்படையில் கட்சி சார்பாக பேரணி நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த பேரணி கடந்த திங்கட்கிழமை மதியம் நடந்தது. டெல்லியில் பட்டேல் சவுக் பகுதியிலிருந்து நாடாளுமன்ற சாலை வரையிலான மெகா பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவரை வரவேற்க சாலையின் இருபுறங்களிலும் மக்கள் கூட்டம் திரண்டு இருந்தது. இந்த பேரணியை பயன்படுத்தி சில நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த  புகாரில் ஒருவர் கூறியதாவது, தன் மொபைல் போனை திருட முயன்ற நபரை உடனே பிடித்து விட்டேன். எனினும் அந்நபர் போனை கூட்டாளியிடம் கொடுத்துவிட்டார். அதன்பின் கூட்ட நெருக்கடியை பயன்படுத்தி அந்த கூட்டாளி தப்பி சென்றுவிட்டார். ஆனால் அவரை நேரில் அடையாளம் காணமுடியும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கையோடு பிடித்த நபர் உத்தரபிரதேசத்தின் மணிப்பூரி பகுதியை சேர்ந்தவர் என்பதும் 19 வயது வாலிபர் என்பதும் தெரியவந்துள்ளது. காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இப்பேரணியில் பத்திரிகை நிரூபர் ஒருவரின் ஐபோன் திருட்டு போயுள்ளது. மேலும் புகைப்பட கலைஞர் ஒருவரின் கேமிரா லென்சும் திருடப்பட்டு உள்ளது. இந்த 3 திருட்டு சம்பவங்களும் ஒரே நேரத்தில் நடந்துள்ளது.