சென்னை கொரட்டூர் பகுதியில் வசித்து வருபவர் குமரேசன்(32). இவரது 3-வது மனைவி சங்கீதா(26) ஆவார். இவர்கள் பல்வேறு இடங்களில் சென்று பழைய பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர். இப்போது அவர்கள் புதுச்சேரி கிருமாபாக்கம் அடுத்துள்ள மூர்த்திகுப்பம் பகுதியில் தங்கிவருவதாக தெரிகிறது. இந்த நிலையில் சங்கீதா 8 மாத கர்ப்பிணியாக இருந்து உள்ளார். சென்ற மாதம் இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு பபிதா என பெயர் சூட்டியிருக்கின்றனர். குழந்தை பிறந்து 29 தினங்களே ஆன நிலையில், பபிதாவை திடீரென காணவில்லை. இந்நிலையில் நேற்று (ஏப். 16) காலை மனப்பட்டு வனப்பகுதி அருகிலுள்ள மதுபான கடையின் பின்புறத்தில் மணற் பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்று புதைக்கப்பட்டு கை, கால்கள் வெளியில் தெரிவதாக தகவல் கிடைத்தது.

அதன்பின் கிருமாம்பாக்கம் உதவி காவல் ஆணையர் விஜயகுமார், ஏட்டு பிரிமியர் ரமேஷ் போன்றோர் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டனர். அது காணாமல் போன சங்கீதாவின் குழந்தை என தெரியவந்தது. இதுபற்றி காவல்துறையினர் கூறியதாவது “குழந்தைக்கு உடம்பு சரியில்லாததால் அவர்கள் கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரை செய்துள்ளனர்.

பின் அவர்கள் குழந்தையை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் கடந்த ஏப். 15 ஆம் தேதி இரவு சங்கீதா குழந்தைக்கு பால் கொடுத்தபோது கை, கால்கள் குளிர்ச்சியடைந்தது. பின் குழந்தை இறந்துவிட்டது. உடனே சங்கீதா தன் கணவர் குடி போதையில் இருந்த நிலையில், அவரை அழைத்துச்சென்று அருகில் பள்ளம் தோண்டி குழந்தையை மண்ணில் புதைத்துள்ளனர்” என்று கூறினர்.