சித்திரை திருநாள் அன்று பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் சொத்து மதிப்பு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து மதிப்பு விபரங்களை வீடியோ மூலம் வெளியிட்டார். அது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் திமுகவினர் விளக்கமளிக்க வேண்டும். இதையடுத்து தன் தரப்பு விவரத்தை செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவிப்பதாக அண்ணாமலை கூறினார்.

இந்நிலையில் அண்ணாமலை கூறியிருப்பதாவது “நேற்று முன்தினம் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தபோது ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் ரூ.84 கோடி நான் பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார். தன் மீதும், பாஜக மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொது வெளியில் வைத்ததற்கு ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக கோருகிறேன். இதனை நான் PM Cares நிதிக்கு செலுத்த விரும்புகிறேன்.

ஆகவே அடுத்த 48 மணிநேரத்தில் என் மீதும் எனது கட்சி மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் திரு ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும் என மிகப் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு நீங்கள் அனுப்பிய சட்ட அறிக்கைக்கு பதிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தமைக்கு இழப்பீடு கோரும் சட்ட அறிக்கையும் உங்களை விரைவில் வந்துசேரும் என தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.