சித்திரை திருநாள் அன்று பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் சொத்து மதிப்பு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து மதிப்பு விபரங்களை வீடியோ மூலம் வெளியிட்டார். அது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் திமுகவினர் விளக்கமளிக்க வேண்டும். இதையடுத்து தன் தரப்பு விவரத்தை செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவிப்பதாக அண்ணாமலை கூறினார்.

அதிலும் குறிப்பாக தி.மு.க-வுக்கு ரூ.1,408.94 கோடி சொத்து இருப்பதாக கூறினார். இதையடுத்து தி.மு.க, அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. திமுகவின் சொத்து மதிப்பு பற்றி உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்திருப்பதால் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோவை நீக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு திமுகவுக்கு களங்கம் கற்பித்ததற்காக ரூ.500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் அந்த நோட்டீசில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுபற்றி டுவிட்டரில் காயத்திரி ரகுராம் கூறியிருப்பதாவது “திமுக, அண்ணாமலையை விட்றாதீங்க. பணம் கொடுக்க முடியாதென சொல்லிவிட்டு தன்னிடம் 4 ஆடுகள் மட்டும்தான் இருக்கிறது என்று கூறினால், அண்ணாமலையின் நண்பர்கள் பெரிய பணக்காரர்கள். அந்த ரூ.500 கோடியை அவரது தாராள நண்பர்களை கொடுக்க சொல்லுங்கள் (அ) அவர் தன் நண்பர்களை கொடுக்க சொல்வார்” என தெரிவித்து உள்ளார்.