சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் பங்கேற்றுள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் பயணத்தை சிவசேனா (யுபிடி) எம்.பி. சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் டாவோஸ் மாநாட்டிற்குச் செல்வதை ஒரு சுற்றுலாப் பயணம் போன்றது என்று குறிப்பிட்ட அவர், இந்தியக் கண்ணோட்டத்தில் இந்த மாநாடு தேவையற்றது என்றும் விமர்சனம் செய்திருந்தார்.

மும்பையில் அமர்ந்து செய்ய வேண்டிய ஒப்பந்தங்களைச் சர்வதேச அளவில் விளம்பரத்திற்காக அங்கு சென்று செய்வதாகச் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார். சஞ்சய் ராவத்தின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள முதல்வரின் மனைவி அம்ருதா பட்நாவிஸ், சஞ்சய் ராவத்தின் பேச்சுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ளார்.

சுற்றுலா செல்பவர்கள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ச்சியான ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க மாட்டார்கள் என்றும், மகாராஷ்டிராவிற்கு முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவே முதல்வர் கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

உலக அரங்கில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்துவது ஒவ்வொரு மாநிலத் தலைவரின் கடமை என்றும் அம்ருதா பட்நாவிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.