தென் தமிழக மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் பிறகு அரபிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் இன்னும் ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதன்பிறகு இன்று தமிழகத்தில் உள்ள கரூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று வருகிற 15-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் இன்றைய தினம் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.