காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பட்டாசு ஆலை உரிமையாளரான அதிமுக பிரமுகர் நரேந்திரன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பட்டாசு ஆலைகளை கண்காணித்து முறைப்படுத்த தனி விதிகளை வகுக்க வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மாவட்டந்தோறும் பட்டாசு ஆலைகளுக்கு பொறுப்பு அதிகாரி ஒருவரை நியமித்து, விபத்து நடந்தால் அந்த அதிகாரியை பொறுப்பேற்க செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் அவர் காஞ்சிபுரம் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் கூறியதோடு, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கும்படி வற்புறுத்தியுள்ளார்.