அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுக அரசு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எந்தவித நன்மையும் செய்யவில்லை. அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் மக்களுக்கு பலனளிக்கும் விதமாக எதையும் நிறைவேற்றாமல் இது சொல்லாட்சி அல்ல செயலாட்சி என முதல்வர் கூறி வருகிறார். கடந்த 36 மாதங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொலை, கொள்ளை, போதைப்பொருள், பாலியல் வன்கொடுமைகள் போன்றவைகள் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளுக்கு போதை பொருளை கடத்துவதில் ஆளும் கட்சியினர் சிலரே ஈடுபட்டுள்ளனர்.

இது தமிழ்நாட்டை தலைகுனிய வைத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சொத்து வரி உயர்வு குடிநீர் வரி, உயர்வு என பல பிரச்சினைகளால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிமுக ஆட்சியில் மக்களுக்காக கொண்டுவரப்பட்ட பல நல்ல திட்டங்களை திமுக அரசு ரத்து செய்தது. அதோடு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை தாமதமாக செய்து வருவதோடு பல திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியுள்ளது. இது திமுக அரசின் 3 ஆண்டு கால சோதனை ஆகும். இன்னும் இந்த திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழகம் படு பாதாளத்திற்கு சென்று விடுமோ என பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். மேலும் தற்போது நடப்பது சொல்லாட்சியும் செயலாட்சியும் கிடையாது. மாறாக பயனற்ற, மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.