
ஆசிய கோப்பை முதல் போட்டியில் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
2023 ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் முல்தானில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 342 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர்களான ஃபகார் ஜமான் 14 ரன்களிலும், இமாம்-உல்-ஹக் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் கேப்டன் பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் ஜோடி இணைந்து சிறப்பாக ஆடியது.

பின் ரிஸ்வான் 44 ரன்களில் ரன் அவுட் ஆனார்.. பின் ஆகா சல்மான் 5 ரன்னில் வெளியேற, தொடர்ந்து இப்திகார் அகமது மற்றும் பாபர் அசாம் இருவரும் கைகோர்த்து முதலில் பொறுமையாக ஆடி பின் அதிரடி காட்டினர். இந்த ஜோடி 214 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இருவருமே சதமடித்தனர். கடைசி ஓவரில் பாபர் அசாம் அவுட் ஆனார். மேலும் ஷதாப் கான் (4 ரன்கள்) கடைசி பந்தில் அவுட் ஆனார். இப்திகார் அகமது அவுட் ஆகாமல் கடைசிவரை இருந்தார்.
பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் 131 பந்துகளில் 151 ரன்கள் குவித்தார். அவர் தனது இன்னிங்ஸில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அடித்தார். இது தவிர, இப்திகார் அகமது வெறும் 71 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார். நேபாள அணி தரப்பில் அதிகபட்சமாக சோம்பால் கமி 2 விக்கெட்டுகளும், கரண் கேசி மற்றும் சந்தீப் லமிச்சானே தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் ஆடிய நேபாளம் அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 23.4 ஓவரில் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நேபாளம் அணியில் அதிகபட்சமாக ஆரிப் ஷேக் 26 ரன்களும், சோம்பால் கமி 28 ரன்களும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷதாப் கான் 4விக்கெட்டுக்களும், ஷஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோர் தலா 2விக்கெட்டுக்களும், நசீம் ஷா மற்றும் முகமது நவாஸ்ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. செப்டம்பர் 2ஆம் தேதி உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளார்.
இப்போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளார். நேபாளத்திற்கு எதிராக பாபர் அசாம் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 19வது சதத்தை அடித்தார். பாபர் அசாம் 102 இன்னிங்ஸ்களில் 19வது முறையாக சதம் கடந்தார். இதன் மூலம், குறைந்த இன்னிங்சில் 19 சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை பாபர் அசாம் பெற்றுள்ளார். அதே நேரத்தில், இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் மூத்த பேட்ஸ்மேன் ஹஷிம் ஆம்லா உள்ளார். ஹசிம் அம்லா 104 இன்னிங்ஸ்களில் 19 சதங்கள் அடித்தார்.
பட்டியலில் விராட் கோலி எங்கே?
இதையடுத்து 3வது இடத்தில் இந்திய வீரர் விராட் கோலி உள்ளார். விராட் கோலி 124 இன்னிங்சில் 19 சதங்கள் அடித்துள்ளார். அதே சமயம் விராட் கோலிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் உள்ளார். டேவிட் வார்னர் 139 இன்னிங்ஸ்களில் 19 சதங்கள் அடித்தார். தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 171 இன்னிங்சில் 19 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம், ஹாஷிம் ஆம்லா, விராட் கோலி, டேவிட் வார்னர் போன்ற மூத்த வீரர்களை பாபர் அசாம் பின்னுக்கு தள்ளி சாதனைபடைத்துள்ளார்.
1️⃣2️⃣9️⃣ runs scored in the last 10 overs! 🔥
Fireworks in @babarazam258 and @IftiMania's record stand lift Pakistan to 3️⃣4️⃣2️⃣-6️⃣ 🏏#PAKvNEP | #AsiaCup2023 pic.twitter.com/r1U2zVxVBa
— Pakistan Cricket (@TheRealPCB) August 30, 2023