ஆசிய கோப்பையில் இன்று இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகிறது.

2023 ஆசிய கோப்பை இலங்கை (9 போட்டிகள்) மற்றும் பாகிஸ்தானில் (4 போட்டிகள்) நடைபெறவுள்ளது. ஆசியக் கோப்பையில், 6 அணிகள் தலா 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குரூப்-ஏவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளமும், குரூப்-பியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும் உள்ளன. இதில் நேற்று நடந்த முதல் போட்டியில் நேபாளத்தை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரின் 2வது ஆட்டம் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டி இலங்கையில் உள்ள பல்லேகல சர்வதேச மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் 51 முறை ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இலங்கை 40 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், பங்களாதேஷ் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. போட்டி தொடங்கும் முன்பே இலங்கைக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. லஹிரு குமார, துஷ்மந்த சமிர, டில்ஷான் மதுஷங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் காயமடைந்துள்ளனர். அதனால் அவர்கள் ஆசிய கோப்பையை தவறவிட்டனர்.

அதேபோல வங்கதேசத்தின் எபாதத் ஹொசைன் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தன்சிம் ஹசன் ஆசியக் கோப்பைக்கான வங்கதேச அணியில் சேர்க்கப்பட்டார். மேலும் இலங்கைக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்னதாகவே தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் உடல்நலக்குறைவு (வைரஸ் காய்ச்சல்) ஏற்பட்டதால் ஆசிய கோப்பையிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அனாமுல் ஹக் பிஜோய் பங்களாதேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு ஏற்றது. எனவே போட்டி எப்படி அமையும் என்று கூற முடியாது. குறிப்பாக மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் போட்டியை மாற்றலாம். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 200 ரன்களை எட்டலாம். மறுபுறம், இந்த இலக்கை அடைவது கடினமாகவும் பார்க்கப்படுகிறது. 

2023 ஆசிய கோப்பைக்கான வங்கதேச அணி :

ஷாகிப் அல் ஹசன் (சி), நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், அஃபிஃப் ஹொசைன் துருபோ, மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், நசும் அகமது, ஷக் மஹேதி ஹசன், நைம் ஷேக், ஷமிம் ஹொசைன், தன்சித் ஹசன் தமீம், தன்சிம் ஹசன் சாகிப், அனாமுல் ஹக் பிஜோய்.

ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி :

தசுன் ஷனகா (கேப்டன்), பதும் நிஷாங்கா, திமுத் கருணாரத்ன, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (துணை கேப்டன்), சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, மகேஷ் திக்ஷனா, துனித் வெல்லலகே , மதிஷ பத்திரனா, கசுன் ராஜிதா, துஷான் ஹேமந்தா,  பினுரா பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன்.