2023 ஆசியக் கோப்பையில் அதிவேகமாக 19 சதமடித்து கோலி மற்றும் அம்லாவை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் அணிக்காக அதிக ஒருநாள் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பாபர் அசம் பெற்றார்..

ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அபார சதம் அடித்தார். நேபாளத்திற்கு எதிராக பாபர் அபாரமாக பேட்டிங் செய்தார். அவர் தனது 19வது ஒருநாள் சதத்தை அடித்தார். பாபர் 151 ரன்கள் எடுத்தார். அவர் தனது 131 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அடித்தார். சதம் அடித்து பல சாதனைகளை படைத்துள்ளார்.

ஹாஷிம் அம்லா மற்றும் விராட் கோலி சாதனை முறியடிப்பு :

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 19 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் பாபர் அசாம். அதாவது, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் மூத்த தொடக்க ஆட்டக்காரர் ஹாஷிம் அம்லா மற்றும் இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன் விராட் கோலி ஆகியோரை முந்தியுள்ளார். பாபர் அசாம் தனது 102வது இன்னிங்ஸில் தனது 19வது சதத்தை அடித்தார். அம்லா 104 இன்னிங்ஸ்களில் 19வது சதத்தை எட்டினார். கோலி 19 சதங்களுக்கு 124 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். அதே சமயம் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 139 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். மேலும் தென்னாப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ் 171 இன்னிங்ஸ்களில் 19வது சதத்தை நிறைவு செய்துள்ளார்..

லாரா, ஜெயவர்த்தனே மற்றும் வார்னர் ஆகியோரின் சாதனைகளை சமன் செய்துள்ளார்.

சுவாரஸ்யமாக, அவர் பிரையன் லாராவின் தனித்துவமான சாதனையை சமன் செய்தார். ஒருநாள் கிரிக்கெட்டில்  19 சதம் விளாசிய மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவை சமன் செய்துள்ளார். இலங்கையின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரையும் சமன் செய்துள்ளார் பாபர். இவர்கள் அனைவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தம் 19 சதங்கள் அடித்துள்ளனர். ஜெயவர்த்தனே 418 ஒருநாள் இன்னிங்க்ஸ்களிலும், பிரையன் லாரா 289 இன்னிங்க்ஸ்களிலும், டேவிட் வார்னர் 139 இன்னிங்க்ஸ்களிலும் 19 சதங்கள் அடித்துள்ளனர். அதே நேரத்தில், பாபர் அசாம் வெறும் 102 இன்னிங்க்ஸ்களில் மட்டுமே 19 சதமடித்து அவர்களை சமன் செய்தார்.

அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தான் அணிக்காக அதிக ஒருநாள் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றார். பாகிஸ்தான் அணிக்காக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 247 ஒருநாள் போட்டிகளில் 20 சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். விரைவில் இவரையும் முந்தி முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி :

2023 ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் முல்தானில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 342 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் 131 பந்துகளில் 151 ரன்கள் குவித்தார். அவர் தனது இன்னிங்ஸில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அடித்தார். இது தவிர, இப்திகார் அகமது வெறும் 71 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய நேபாளம் அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 23.4 ஓவரில் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நேபாளம் அணியில் அதிகபட்சமாக ஆரிப் ஷேக் 26 ரன்களும், சோம்பால் கமி 28 ரன்களும் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷதாப் கான் 4விக்கெட்டுக்களும், ஷஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோர் தலா 2விக்கெட்டுக்களும், நசீம் ஷா மற்றும் முகமது நவாஸ்ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.