லண்டனின் ஹேமர்ஸ்மித் (Hammersmith) பகுதியில் கடந்த 16 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த புகழ்பெற்ற இந்திய உணவகமான ‘ரங்ரேஸ்’ (Rangrez), அடுத்த மாதம் முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் உரிமையாளர் ஹர்மன் சிங் கபூர் (Harman Singh Kapoor) அறிவித்துள்ளார்.

இதற்குக் காரணமாக அவர் கூறியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. விலைவாசி உயர்வு ஒருபுறம் இருந்தாலும், பாகிஸ்தானியர்களால் தனது உணவகம் தொடர்ந்து குறிவைத்துத் தாக்கப்படுவதாகவும், ஆன்லைன் மூலம் தரக்குறைவான விமர்சனங்கள் மற்றும் மிரட்டல்கள் வருவதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லண்டன் காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் முறையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அவர், இனி தனது முழு நேரத்தையும் சமூக செயல்பாடுகளுக்காக (Activism) அர்ப்பணிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

“எனது வியாபாரத்தை நீங்கள் தடுக்கலாம், ஆனால் எனது மன உறுதியை அல்ல” என்று மிரட்டல் விடுத்தவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஹர்மன் சிங்கின் இந்த முடிவு, லண்டன் வாழ் இந்தியர்களிடையே பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.