
இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் காரணமாக எல்லை பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் நேற்று அமலுக்கு வந்தது. ஆனால் பாகிஸ்தான் அத்துமீறி ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள உதம்பூர் பகுதியில் தாக்குதல் நடத்தியது. ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் விமானப்படை நிலையம் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த தாக்குதல் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் வெற்றியுடன் முறியடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் விமானப்படை நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த மருத்துவ உதவியாளர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு பகுதியை சேர்ந்த இவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர் விமானப்படை நிலையத்தில் மருத்துவ உதவியாளராக பணியில் இருந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதலின் போது இடிபாடுகளின் காரணமாக விமான நிலையத்தில் இருந்த சுரேந்திர சிங் மோகா உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா சுரேந்திர சிங் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களையும், அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல்களையும் தெரிவித்துள்ளார்.