
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் அருகே சக்கிலிப்பட்டி கிராமத்தில் மேலத்தெருவில் வசித்து வந்தவர் அஜய் (23). இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி காலை தனது தெருவில் உள்ள ஒரு வீட்டில் அஜய் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சென்ற மின் கம்பியின் மீது எதிர்பாராத விதமாக அஜய் உரசியுள்ளார்.
அதனால் மின்சாரம் தாக்கியதில் அஜய் தூக்கி வீசப்பட்டுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அஜயை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.