நாம் உணவகம், ஷாப்பிங் மால், திரையரங்கம் அல்லது சிறிய கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கிய பிறகு, பில்லிங் செய்யும் போது மொபைல் எண் கேட்பது இன்று மிக பொதுவான நடைமுறையாகி விட்டது. ஆனால் இதை கொடுக்க வாடிக்கையாளர்கள் கட்டாயப்படுத்தப்பட முடியாது என 2023ஆம் ஆண்டில் நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்ட ஆலோசனையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தனது மொபைல் எண்ணை பகிர மறுக்கிறார் என்பதற்காக பொருட்கள் விற்க மறுக்கும் செயல், நுகர்வோர் உரிமைகளை மீறும் நடவடிக்கையாகும்.

பலர் இந்த ஆலோசனையைப் பற்றி இன்னும் அறிந்திருக்காத சூழலில், கடைக்காரர்கள் “புள்ளிகள் சேகரிக்க”, “தள்ளுபடி தகவலுக்காக”, அல்லது “கருத்துக்கணிப்பு” என பல காரணங்களைச் சொல்லி எண்ணை கேட்கின்றனர். ஆனால் உண்மையில், வாடிக்கையாளர்கள் மொபைல் எண்ணை வழங்க வேண்டிய எந்த சட்டப் பிணையும் இல்லை. சிலர் எண்ணை கொடுத்த பின், தொடர்ந்து விளம்பரப் செய்திகள், சலுகைகள், சந்தாதாரி அழைப்புகள் போன்றவற்றால் தொந்தரவு அடைவது குறிப்பிடத்தக்கது.

இதே நேரத்தில், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுவதாவது, “மொபைல் எண் என்பது மின்னஞ்சல், வங்கி செயலி, சமூக ஊடகங்கள் என பல நுட்ப சேவைகளுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. OTP வழியாக உள்நுழைவு அம்சங்களும் அதனுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. எனவே, எந்த இடத்திலும் எண்ணை பகிரும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்” என எச்சரிக்கின்றனர். இந்த தகவல்களை வேறு நபர்களுக்கு அனுமதியின்றி வழங்குவது, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 72-A இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இத்தகைய சூழலில், பெண்கள் பெரிதும் புகார் அளித்ததன் பேரில் ஆலோசனை வெளியிடப்பட்டது. பொதுக் கவுண்டர்களில் எண்ணை பகிர்வதில் சங்கடமும் பாதுகாப்பற்ற உணர்வும் அதிகம் காணப்படுகிறது. எனவே, அனைத்து வணிக நிறுவனங்களும் “தன்னார்வ சம்மதம்” என்பதை உறுதி செய்யவேண்டும் என நுகர்வோர் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. எனவே அடுத்த முறை உங்கள் எண்ணை கேட்பவர்கள் இருந்தால், சட்டப்படி அதை மறுக்கலாம் என்பதையும், இது உங்கள் உரிமை என்பதையும் மறந்துவிட வேண்டாம்!