கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கங்காவதி நகரில் கடந்த சில நாட்களாக மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிச் செல்லும் வினோதச் சம்பவம் அரங்கேறி வருகிறது.

அந்த நகரின் குடியிருப்புப் பகுதியான சிபிஎஸ் பகுதியில் நள்ளிரவில் சுற்றுச்சுவர்களைத் தாண்டி குதிக்கும் அந்த நபர் துணிக்காயப்போடும் கம்பிகளில் இருக்கும் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறிவைத்துத் திருடுகிறார்.

வீடுகளில் இருக்கும் நகை அல்லது பணத்தைத் தொடாமல் இவற்றை மட்டும் திருடுவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மர்ம நபரின் அத்துமீறல்கள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள நிலையில் அந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

தொடர்ச்சியாக நடைபெறும் இந்தச் சம்பவத்தால் இது ஏதேனும் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட அல்லது வக்கிர புத்தி கொண்ட நபரின் வேலையாக இருக்கலாம் என்று அந்தப் பகுதி பெண்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் வெளியே வரவும் அவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கங்காவதி நகர காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அந்த மர்ம நபரை அடையாளம் காணும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.