பெங்களூருவில் அரக்கத்தனமான கொலை ஒன்று நிகழ்ந்துள்ளது. ஸ்ரீராமபுரம் சுதந்திர பாளையாவைச் சேர்ந்த கோபாலின் மகள் யாமினி பிரியா (20), பனசங்கரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் படித்து வந்தார்.

தேர்வு எழுதிக் கொண்டு வீடு திரும்பிய யாமினி, மல்லேசுவரம் மந்திரி வணிக வளாகம் பின்புறம் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது, திடீரென வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது கத்தியை எடுத்து, அவரின் கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு அந்த வாலிபர் தப்பி ஓடியுள்ளார்.

தகவல் கிடைத்ததும் ஸ்ரீராமபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், காதலிக்க மறுத்த கோபத்தில் யாமினியை கொன்றது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் விக்னேஷ் என்பதும் தெரியவந்தது. சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு நிலவ, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பிரேத பரிசோதனைக்குப் பின் யாமினியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இளம் வயதிலேயே உயிரிழந்த யாமினியின் உடலை பார்த்து பெற்றோரும் உறவினரும் பெரும் அழுகையுடன் துயரத்தில் மூழ்கினர். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சுதந்திர பாளையா வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் மாலை 6 மணியளவில் அரிசந்திரகாட் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. முழு பகுதியில் துக்கமும் கோபமும் சூழ்ந்தது. இதற்கிடையே விக்னேஷ் குறித்து போலீசாருக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. கொரோனா காலத்தில் மாநகராட்சி மார்ஷல் என நடித்து பலரிடம் பணம் பறித்த வழக்கில் அவர் முன்பு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர் என்பது வெளிவந்தது.

இதனால், இந்தக் கொலை சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. விக்னேஷை பிடிக்க போலீசார் இரண்டு சிறப்பு அணிகளை அமைத்து தீவிரமாக தேடினர். இந்நிலையில், அவர் சோழதேவனஹள்ளியில் ஒளிந்திருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அதிரடியாக அங்கு சென்று, வெறும் 24 மணி நேரத்தில் விக்னேஷை கைது செய்தனர்.

விசாரணையில், “யாமினி தனது காதலை நிராகரித்ததால் கோபத்தில் கொன்றேன்” என்று அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு அடைக்கலம் கொடுத்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொடூரச் சம்பவம் பெங்களூரு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.