போர் விமானங்கள் என்பது ஒரு நாட்டின் இராணுவ சக்தியின் சின்னமாகவே கருதப்படுகிறது. ஆனால், சில நாடுகள் முன்னேற்றம் செய்யப்பட்ட போர் விமானங்களை வைத்திருந்தாலும், அவற்றை இயக்கக்கூடிய பயிற்சி பெற்ற விமானிகள் இல்லாததால், அந்த விமானங்கள் தரையில் நிற்கும் பொம்மைகளாகவே காணப்படுகின்றன. அதற்கு போர் பாதிப்பு, நிதி குறைபாடு மற்றும் பயிற்சி வசதிகளின் பற்றாக்குறை போன்றவை முக்கிய காரணங்கள் ஆகும்.
அதில் 2021-ஆம் ஆண்டு அமெரிக்கா, ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியபோது, A-29 சூப்பர் டுகானோ மற்றும் Mi-17 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல விமானங்களை விட்டுச் சென்றது. தற்போது தாலிபானின் கட்டுப்பாட்டில் உள்ள இவை, பயிற்சி பெற்ற விமானிகள் இல்லாததால் பறக்க முடியாத நிலையில் உள்ளன.
இதைத்தொடர்ந்து சாட் நாடு, உக்ரைனிலிருந்து மிக்-29 விமானங்களை வாங்கியிருந்தாலும், பயிற்சி பெற்ற விமானிகள் இல்லாததால் பறக்க இயலாமல் போனது. அடுத்து லிபியா நாட்டில் முயம்மர் கடாபியின் ஆட்சிக் காலத்தில் மிக்-21, மிராஜ் F1 போன்ற விமானங்கள் இருந்தன. ஆனால் உள்நாட்டுப் போரால் விமானிகள், பயிற்சி மையங்கள் மற்றும் உள்கட்டமைப்பு முற்றிலும் அழிந்துவிட்டது.
அடுத்ததாக சோவியத் மாகாணத்தில் இருந்து பெற்ற மிக் ஜெட்களை வைத்திருந்த சோமாலியா, பல ஆண்டுகளாக உள்நாட்டு மோதல்களால் எந்த பயிற்சியும் நடைபெறவில்லை. தற்போது அங்குள்ள விமானங்கள் பயன்பாட்டில் இல்லாமல் தரையில் நிற்கின்றன. இதேபோன்று ஏமன் நாடு Su-22 மற்றும் MiG-29 போன்ற விமானங்களை வைத்திருந்தாலும், விமானிகள் காணாமல் போனதாலும், பயிற்சி மையங்கள் அழிந்ததாலும், புதிய விமானிகளை உருவாக்க முடியாத நிலையில் உள்ளது.
குறிப்பாக பாதுகாப்பு என்பது பறக்கும் விமானங்களால் மட்டும் வரையறுக்கப்படாது. அந்த விமானங்களை இயக்கக்கூடிய மக்கள், உள்கட்டமைப்பு மற்றும் நீடித்த முதலீடு தான் உண்மையான இராணுவ சக்தியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. மேலும் வலிமை என்பது சாதனங்கள் மட்டுமல்ல, அவற்றைப் பயன்படுத்தும் திறமை தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
