இந்தியாவில் கடந்த 2003-ம் ஆண்டு வரை பழைய பென்சன் திட்டம் நடைமுறையில் இருந்த நிலையில், 2004-ம் ஆண்டிலிருந்து பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டு அதற்கு பதிலாக புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த பென்ஷன் திட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தில் இருப்பது போன்ற சலுகைகள் இல்லாததால் அரசு ஊழியர்கள் தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதோடு பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். அதன் பிறகு ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது குறித்து மத்திய அரசு எந்த பதிலும் அளிக்காமல் இருந்தது.

இந்நிலையில் மத்திய அரசு மேற்கண்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்தியது தொடர்பாக பதில் அளித்துள்ளது. அதாவது மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. கடந்த நாடாளுமன்ற சபை கூட்டத்தில் கூட மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திய மாநிலங்கள் தேசிய பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தேசிய பென்ஷன் நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு தேசிய பென்ஷன் ஆணையம் மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறியிருந்தது. மேலும் மத்திய அரசு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று கூறுவது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.