டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே, கொரிய நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணி பெண்களிடம் ஒரு வாலிபர் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தக் காணொளியில், அந்த வாலிபர் முதலில் பெண்களிடம் சென்று ‘கைகளை இடித்து வாழ்த்து’ (Fist bump) செய்ய வேண்டும் எனக் கேட்கிறார். ‘இது என் கனவு’ எனக் கூறிய அவர், பெண்களை குழப்பத்தில் ஆழ்த்தினாலும், அவர்கள் அவர் கோரிக்கையை ஏற்று செய்கின்றனர். ஆனால், இந்தச் செயல் இந்தியாவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக நெட்டிசன்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, அந்த வாலிபர் ‘உங்களை கட்டிப்பிடிக்க வேண்டும்’ என விடாப்பிடியாகக் கேட்க, பெண்கள் முதலில் தயங்கினாலும், ஒருவர் அவரை கட்டிப்பிடித்து விட்டு விரைவாக அங்கிருந்து நகர்ந்தார்.
இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதும், பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வாலிபரின் அத்துமீறிய செயலுக்கு இந்தியர்கள் சார்பாக மன்னிப்பு கோருவதாக சிலர் பதிவிட்டுள்ளனர்.
இதுபோன்ற செயல்கள், வெளிநாட்டவர்கள் மத்தியில் இந்தியர்கள் மீது தவறான எண்ணத்தை உருவாக்குவதாகவும், நாட்டின் நற்பெயருக்கு பங்கம் விளைவிப்பதாகவும் நெட்டிசன்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
