உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள ஷயா மருத்துவமனை அருகே நடந்த துயரம் பொதுமக்களின் மனங்களை கலங்க வைத்துள்ளது. ஒரு பக்தர் தனது நாயை காருக்குள் பூட்டிவிட்டு, அருகில் உள்ள கோவிலில் பூஜை செய்ய சென்றார். இந்த நேரத்தில் கொளுத்தும் வெயிலில் மூடிய காருக்குள் நாய் தவித்துக் கொண்டிருந்தது.

இதனை கவனித்த பொதுமக்கள் உடனடியாக உதவிக்காக விரைந்தபோதும், நாயின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. காருக்குள் இருந்து நாயின் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் கதவைத் திறக்க முயன்றனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. சிலர் கண்ணாடியை உடைத்து விடுவோம் என கூறினாலும், மற்றவர்கள் தடுத்தனர். இதனையடுத்து ஒரு பூட்டு தொழிலாளியை அழைத்து கதவை திறந்தனர்.

 

ஆனால் அப்போது நாயின் உடல் நிலை மோசமாகி, பாதி தான் உயிருடன் இருந்தது. சிறிது நேரத்தில் அந்த நாய் உயிரிழந்தது. இதை பார்த்த அனைவரும் பதறி நின்றனர். அந்த நாயின் நிலையைப் பார்த்ததும் பொதுமக்களின் கண்கள் ஈரமாகின. நாயை வெளியே கட்டுமாறு ஏற்கனவே பக்தரிடம் பொதுமக்கள் கேட்டிருந்தாலும், அவர் அதை நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பலரது கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாகனங்களில் செல்லும் போது செல்லப்பிராணிகளை ஒருபோதும் தனியாக விட்டுவிடக்கூடாது என்பதை இந்த சம்பவம் நினைவுபடுத்துகிறது.