பார்சிலோனாவுக்கு பயணம் சென்றிருந்த இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனர் ஆயுஷ் பஞ்ச்மியா, திடீரென பாஸ்போர்ட், அமெரிக்கா விசா, கிரெடிட் கார்டுகள் மற்றும் பணம் ஆகியவை திருடப்பட்டதாக கூறி பகிர்ந்த அனுபவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ETHCC மாநாட்டுக்குப் பின், தனது குழுவுடன் பார்சிலோனாவிலுள்ள ஸ்டார்பக்ஸ் கடையில் அமர்ந்திருந்த அவர், ஒரு கடிதழைப்புக்காக வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்திலேயே, மேசையின் கீழ் வைத்திருந்த அவரது பை காணாமல் போனது.

அந்த பையில் அவரது பயண ஆவணங்கள், முக்கியமாக பாஸ்போர்ட், அமெரிக்கா விசா மற்றும் ஒரு பெரிய தொகை பணம் இருந்தன. திருட்டு குறித்து காவல்துறையில் புகார் கொடுத்த பஞ்ச்மியா, சிசிடிவி காட்சிகளைப் பெற முடியாமல் தவித்தார். போலீசாரை முதலில் விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறிய ஸ்டார்பக்ஸ் ஊழியர்கள், சிசிடிவி காட்சிகளை வழங்க மறுத்தனர். போலீசாரும் சுமார் 20 நாட்களுக்குப் பின் தான் காட்சிகளை பார்வையிட முடியும் என தெரிவித்தனர்.

வார இறுதி என்பதால் இந்திய தூதரகம் மூடப்பட்டிருந்தது. ஆனால் திங்கட்கிழமை காலை, தூதரகம் விரைவாக செயல்பட்டு அவருக்கு “Emergency Certificate” எனும் தற்காலிக பாஸ்போர்ட்டை சில மணி நேரத்திலேயே வழங்கியது. இதன் மூலம் அவர் இந்தியா திரும்பும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது அவர் புதிய ஆவணங்களுக்கு விண்ணப்பித்து வருகிறார்.

சமூக வலைதளத்தில் தனது அனுபவத்தைப் பகிர்ந்த பஞ்ச்மியா, “அந்த பையை மேசையின் கீழ் வைக்க நேர்ந்தது எனது தவறு. ஆனால், இது எவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று. எப்போதும் முக்கிய ஆவணங்களை ஹோட்டல் லாக்கரில் வைக்கவும், எதையும் கண் முன்னே வைத்திருக்கவும்” என பயணிகளுக்கு விழிப்புணர்வு வழங்கியுள்ளார். இந்த சம்பவம் மிகுந்த பதட்டமளித்தாலும், இந்திய தூதரகத்தின் உதவிக்கு நன்றி தெரிவித்து தனது பதிவை முடித்துள்ளார்.