
உசிலம்பட்டி கருமாத்தூர்-முண்டு வேலன்பட்டி பகுதியில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவ்வழியே சென்ற மக்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த விபத்து தகவல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக காவலர் இளவரசி சம்பவ இடத்திற்கு சென்றார். இவர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் புறக்காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் விவரங்களை சேகரித்து அதனை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் சம்பவ நாளில் அவருக்கு ஒரு விபத்து நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அந்த விபத்தில் உயிரிழந்தது அவருடைய கணவர் என்று தெரியவந்தது. இதை பார்த்த அவர் கதறி அழுத நிலையில் பின்னர் தன் கணவர் குறித்த தகவல்களை பதிவேட்டில் எழுதினார். இதைத்தொடர்ந்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.