அசாம் மாநிலம் ஜோர்ஹாட் மாவட்டத்தில் தனது மகனின் பள்ளிக்குச் சென்ற 35 வயது தந்தை திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்ஹாட் சோனாரி பகுதியைச் சேர்ந்த தீபங்கர் பர்டோலோய் என்பவர் அங்குள்ள நீர்ப்பாசனத் துறையில் செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.

தனது மகனின் தேர்வு முடிவுகளைப் பெறுவதற்காக விடுப்பு எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்ற அவர் முடிவுகளைப் பெற்றுக்கொண்டு வெளியேறும்போது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஜோர்ஹாட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தீபங்கர் பர்டோலோய் எந்தவிதமான தீவிர உடல்நலப் பாதிப்புகளும் இல்லாதவர் என்றும் உடற்பயிற்சி மூலம் உடலைத் தகுதியாக வைத்திருந்தவர் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இளம் வயதினர் மற்றும் நடுத்தர வயதினர் மத்தியில் மாரடைப்பு காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருவது மருத்துவ வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவம் சக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தீபங்கர் பர்டோலோய்க்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.