இத்தாலியின் மிலன் நகரில் உள்ள விமான நிலையத்தில் புறப்பட தயாராகிக் கொண்டிருந்த விமானத்தின் என்ஜினால் ஒருவர் உள்ளிழுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இத்தாலியின் மிலன் நகர் பகுதியில் பெர்கமோ விமான நிலையம் உள்ளது. இங்கு ஏர்பஸ் ஏ- 319 என்ற விமானம் பொலோடியா விமான நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது.

இந்த விமானம் இன்று காலை ஸ்பெயினின் அஸ்டூரியாஸ் பகுதிக்கு செல்வதற்காக ஓடுதளத்தில் புறப்பட தயாரான நிலையில் இருந்தது. அப்போது ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்த நபரை திடீரென விமானத்தின் என்ஜின்  உள்ளிழுத்த  நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை வோலோடியா விமான நிறுவனம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டது.

அந்த பதிவில் “உயிரிழந்த நபர் பயணியோ, விமான ஊழியரோ இல்லை..விமானத்திலிருந்த 6 பணியாளர்கள் மற்றும் 154 பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை” என்று கூறியிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த விமான நிலையத்தில் 6 விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பப்பட்டது. 8 விமானங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.