ஈரோடு மாவட்டத்தில் நேசலிங்கம் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு படிப்பாதை வழியாக அடிவாரத்திற்கு வந்தனர். அப்போது இவருடைய மகன் விஷ்வா (8) திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து விஷ்வாவை ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே விஷ்வா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதிக வெயில் காரணமாக விஷ்வா உயரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பழனி அடிவாரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று அதிக வெயில் காரணமாக 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரும் இறந்துள்ளார். அதாவது வேடசந்தூர் ஆத்துமேட்டில் நிழற்குடை ஒன்று உள்ளது. இங்கு 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தங்கி யாசகம் பெற்று வந்தார்.

இவருக்கு திடீரென நேற்று முன்தினம் மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் சக்திவேல் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சக்திவேலின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் அதிகமான வெயில் காரணமாக சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.