ஹரியானா மாநிலத்தில் ஆக்ரா–லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள பதேஹாபாத் சுங்கச் சாவடியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் இறங்கினர்.

கோபத்தின் உச்சத்தில் அவர்கள் சுங்கக் கேட்டை மூடாமல் திறந்து விட்டனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சுங்கச் சாவடியை கடந்து சென்றன.

பொதுவாக சுங்கச் சாவடிகளில் FASTag மூலம் கட்டணம் வசூலிக்கப்படும். வாகனம் வந்ததும் கேட் மூடப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்ட பிறகு தான் திறக்கப்படும். ஆனால், ஊழியர்கள் கேட்டை திறந்துவிட்டதால், அனைத்து வாகனங்களும் கட்டணம் செலுத்தாமல் கடந்து சென்றன. இதன் மூலம் மத்திய அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதேஹாபாத் சுங்கச் சாவடி ஸ்ரீசாய் அண்டு தத்தார் என்ற நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம், “தீபாவளி போனஸ் வழங்கப்படும்” என்று உறுதியளித்திருந்தாலும், பணம் ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ஊழியர்கள் பல மணி நேரம் வேலை நிறுத்தம் செய்து, சுங்க வசூல் முறையை நிறுத்தி வைத்தனர்.

“நான் ஒரு வருடமாக இங்கு வேலை செய்கிறேன். ஆனால் இன்னும் ஒருமுறையும் போனஸ் தரப்படவில்லை. சம்பளமும் தாமதமாகவே கிடைக்கிறது. மேலாளர் எங்களை மாற்றிவிடுவோம் என்று மிரட்டுகிறார். ஆனால் நாங்கள் அடிமையாக வேலை செய்ய முடியாது,” என ஒரு ஊழியர் ஆவேசமாக தெரிவித்தார். தற்போது இந்த சம்பவம் குறித்து சுங்க நிர்வாகமும், மாநில போக்குவரத்து துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.