உழைத்து ஓடாய்த் தேயும் ஒரு ஏழைத் தொழிலாளிக்கு கோடிக்கணக்கில் நோட்டீஸ் வந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் உபி-யில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்த் என்ற கூலித் தொழிலாளிக்கு, வருமான வரித்துறை ரூ. 7.15 கோடி பணப்பரிமாற்றம் செய்துள்ளதாக அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி 6 ஆண்டுகளுக்கு முன் கோவிந்தின் பெயரில் சீதாப்பூரில் உள்ள எச்டிஎஃப்சி (HDFC) வங்கிக் கிளையில் மோசடிக் கும்பல் ஒன்று கணக்கைத் தொடங்கியுள்ளது.
பாஸ்புக் மற்றும் ஏடிஎம் கார்டுகளைத் தாங்களே வைத்துக்கொண்டு, கோவிந்துக்குத் தெரியாமலேயே ரூ. 7,15,92,786 பணப் பரிமாற்றம் செய்துள்ளனர்.
வருமான வரி செலுத்தாததால் கோவிந்துக்கு நோட்டீஸ் வந்த பின்னரே இந்த மெகா மோசடி அம்பலமாகியுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த ஏழைக் குடும்பம், கடந்த சில நாட்களாகச் சாப்பாடு கூட இல்லாமல் தவித்து வருகிறது.
