மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருக்கிறார். இதனால் அவரை நாடு கடத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நாட்டை விட்டு தப்பியோடிய அவர் பாகிஸ்தானில் வசித்து வருகிறார் என சொல்லப்படுகிறது. இப்ராகிமின் சகோதரி ஹசீனா பார்க்கர், இந்தியாவிலேயே வசித்து வந்த நிலையில், சில வருடங்களுக்கு முன் காலமானார்.

அவருடைய மகன் அலிஷா இப்ராகிம் பார்க்கரிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டனது. அப்போது பல தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது, இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அப்துல்லா காஜி பாபா தர்கா அருகில் ராணுவ குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இதற்கிடையில் இப்ராகிம் தனது முதல் மனைவி மெஹ் ஜாபீனை விவாகரத்து செய்யாமலேயே, 2வது திருமணம் செய்துகொண்டார்.

இதில் மெஹ் ஜாபீன் மும்பையிலுள்ள தனது உறவினர்களிடம் தொடர்பில் இருந்து வருகிறார். அவரை துபாயில் வைத்து சென்ற வருடம் சந்தித்தேன் என அலிஷா கூறியுள்ளார். டி கம்பெனி எனும் பெயரில் சர்வதேச பயங்கரவாத இயக்கம் ஒன்றை நடத்தி வருவதற்காக தாவூத் இப்ராகிம், அவரது கூட்டாளி சோட்டா சகீல் மற்றும் 3 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வருடம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.