51.3 கி.மீ நீளத்தில்‌ சென்னைக்கு வடக்கில்‌ எண்ணூர்‌ முதல்‌ தெற்கு பகுதியில்‌ கோவளம்‌ வரை சென்னை கடற்கரை அமைந்திருக்கிறது. சென்னையில்‌ சுற்றுலாவை மேம்படுத்தும்‌ நோக்கில், இந்த பகுதிகளுக்கு நீலக்கொடி தகுதியை பெற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடற்கரையை சுற்றி உள்ள பகுதிகளை பொதுமக்கள்‌ எளிதில்‌ அணுகும்‌ அடிப்படையில் பாதுகாப்புடனும்‌ சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும்‌ அமைக்கப்படுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தியாவில் இதுவரை 10 நீலக்‌கொடி கடற்கரைகள்‌ இருக்கிறது. இவற்றில் தமிழகத்தை பொறுத்தவரை நீலகொடி தகுதியை ஏற்கெனவே கோவளம்‌ கடற்கரை பெற்று உள்ளது. இத்திட்டத்தின் படி முதற்கட்டமாக சென்னை மெரீனா முதல்‌ கோவளம்‌ கடற்கரை வரை 20 கடற்கரைகள்‌ 31 கி.மீ. தொலைவில்‌ மேம்படுத்தப்பட இருக்கிறது. இதற்கென ரூ.100 கோடி மதிப்பில்‌ திட்டம்‌ தயாரிக்கப்பட்டு ஜூலை-25 2022 அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த சிறப்பு செயல்பாட்டு திட்டத்தில்‌ மத்திய -மாநில அரசு சார்ந்த 22 துறைகள்‌ உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்த திட்டம் வாயிலாக ஆங்காங்கு பிரிந்து காணப்படும்‌ சென்னையிலுள்ள கடற்கரைகளை இணைப்பதால்‌ தமிழ்நாட்டின்‌ சுற்றுலாவானது மேம்படும்‌. இதன் காரணமாக இந்த முயற்சியின் வெற்றியை தொடர்ந்து தமிழ்நாட்டின்‌ மற்ற கடற்கரைகளிலும்‌ இத்திட்டம் செயல்படுத்தப்படும்‌ என அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.