நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கைது நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
நாசிக்கைச் சேர்ந்த சுபம் கைர்னார் மற்றும் அகமதுநகரைச் சேர்ந்த தனஞ்சய் லோகண்டே ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது புனேவில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் மனிஷா வாக்மரே என்ற பெண்ணை சிறப்புப் படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மனிஷாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் மற்றும் செல்போன்களை ஆய்வு செய்தபோது, திடுக்கிடும் பல வாட்ஸ்அப் தகவல்கள் சிக்கியுள்ளன.
வினாத்தாள் கசிவு கும்பலுக்கும் மாணவர்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டு, மாணவர்களைத் தரகர்களிடம் அழைத்துச் செல்லும் வேலையை இந்தப் பெண் செய்ததாகத் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, முக்கியக் குற்றவாளியான தனஞ்சயுடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், பல கோடி ரூபாய் கைமாறியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சங்கிலித் தொடர் கைது நடவடிக்கைகளால் நீட் தேர்வு மோசடியின் பின்னணியில் உள்ள பெரிய நெட்வொர்க் விரைவில் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
