தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது நடிகர் ஷாருக்கானுடன் சேர்ந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாராவின் 75-வது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் தற்காலிகமாக நயன்தாரா 75 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர்கள் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் போன்றவைகள் சேர்ந்து தயாரிக்கிறது. மேலும் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.