
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் துளசி என்பவர் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று அந்த இடத்திற்கு ஒரு ஆட்டோவில் சில நபர்கள் ஒரு பெட்டி டெலிவரி செய்தனர். அதை திறந்து பார்த்தபோது, 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒரு சடலம் இருந்தது. அத்துடன் ஒரு கடிதமும் இருந்தது. அதில் துளசியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு 3 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும், வட்டியும் முதலும் 1.35 கோடி கொடுக்க வேண்டும் என்றும், மோசமான விளைவுகள் நடக்கக்கூடாது என்றால் இந்த பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்றும் மிரட்டப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த துளசியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துளசிக்கு உதவி வந்தது தெரியவந்தது. மோட்டார் உள்ளிட்ட மின் சாதனங்கள் மற்றும் இதர பொருட்களை அனுப்புவதாக கூறி சடலத்தை வைத்து பெட்டிய டெலிவரி செய்துள்ளனர். இந்த கும்பலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு கடந்த 3,4 நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர்கள் குறித்த தகவலையும் சரி பார்த்து வருவதாகவும், பெட்டியில் அனுப்பப்பட்ட சடலம் யாருடையது என்பதை பரிசோதனையின் ஆய்வுக்குப் பின்னரே கூற முடியும் என்றும் காவல்துறையினர் கூறினார். இதற்கிடையில் அந்த குடும்பத்தின் இளைய மருமகனை நேற்றிலிருந்து காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.